alangaara vaasal

Friday, February 8, 2013

திருடர்களை விரட்டிய அற்புதம்


நாகூர் ஆண்டவர்கள் தன் தாயின் வயிற்றில் இருந்த ஒன்பதாமாதம் நிகழ்ந்த அற்புதம் இது .மாணிக்கபூரின் அருகில் இருந்த காட்டில் கொள்ளையர்கள் அதிகம் இருந்தார்கள் .இவர்கள் அடிக்கடி ஊரில் புகுந்து கொள்ளை அடிப்பது வழக்கம் .அன்றும் கொள்ளையர்கள் ஒன்று கூடி ஆயுத பாணிகளாய் வந்து மாணிக்கப்பூரை சுற்றி வளைத்தனர் .கொள்ளையரை எதிர்த்து நிற்க யாரும் வரவில்லை .ஊரே பயந்துப்போய் இருந்தது . ஆண்டவர்களின் தந்தை ஹசன் குத்தூஸ் இறைவணக்கத்தில் ஈடுபட்டு இருந்தார்கள் .தாயார் பாத்திமா ஊரில் நடக்கும் விசயங்களை கேட்டு தங்கள் வீட்டை தாளிட்டுகொண்டார்கள் .இரண்டு ரக் அத் நபில் தொழுது ,அத்தொழுகையின்  இருப்பிலேயே இருந்து "யா அல்லாஹ் !இக்கொள்ளையர்களிடமிருந்து எங்களை காப்பாற்று !இவர்களை துரத்தியடி என்று துவாக்கேட்டார்கள் .சிறிது நேரத்தில் தாயார் வயிற்றில் நிறை கர்ப்பமாய் இருக்கும் ஆண்டவரவர்கள் ஆச்சர்யமாகவும் ,அறியப்படாமலும் வயிற்றிலிருந்து வெளிப்பட்டு ,ஒரு வீரமிக்க வாலிபராய் ,பசுமையான உடை அணிந்து ,பிரகாசமிக்க வாள் ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு தாயார் முன் வந்து நின்று "அன்னையே ! இப்போது ஊரில் புகுந்திருக்கும் கொள்ளையர்களுக்காக தாங்கள் அஞ்சவேண்டாம் . இவ்வூரில் ஒரு சிறு துரும்பையும் எடுக்கவிடாமல் விரட்டியடிக்கிறேன் . அவர்கள்
மாணிக்கப்பூரை கனவிலும் நினைக்க மாட்டார்கள் . இன்றுமுதல் இவ்வூரில் அடியெடுத்து வைக்க துணிய மாட்டார்கள் " என்று சொல்லிவிட்டு வீட்டின் தலைவாசல் கதவை திறந்துக்கொண்டு வெளிப்பட்டார்கள் . வாசலில் சிவப்புக் குதிரை ஒன்று நின்றது . அதில் ஆண்டவர்கள் ஏறி கையில் பிடித்த வாளுடன் தயாராய் நின்றார்கள் . தங்கள் வயிற்றில் இருக்கும் பாலகரே வாலிபராய் வந்து சொன்ன சொற்களைக் கேட்டு செய்யிதா பாத்திமா ஆச்சர்யமாய் தலைவாசல் போய் இனி நடப்பதை அறிய ஆவலாய் பார்த்தார்கள் . பின்பு சற்று நேரத்தில் பச்சை நிற உடை அணிந்த சிவப்புக் குதிரைகளில் வந்த ஒரு கூட்டத்தார் , ஆயுதங்களை கையில் ஏந்தி வானத்தில் இருந்து இறங்கி ஒவ்வொருவராக ஆண்டவர்களிடத்தில் வந்து கையைத் தொட்டு முத்தமிட்டு ஸலாம் சொல்லி எல்லோரும் ஒருமித்து திரண்டு நின்றார்கள் . ஆண்டவர் அவர்கள் தாங்களே தளபதியாக திருடர்களை விரட்டி அடிக்கும்படி கட்டளையிட்டு சிங்கம்போல் பாய்ந்தார்கள் . ஆண்டவர்களின் குதிரைப்படையை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள் எதிர்ப்பு காட்டாமல் ஆண்டவர்களிடத்தில் வந்து திகைத்தவர்களாய் "எஜமானே ! தாங்கள் எங்கள் பிழையை மன்னித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் . இனி ஒருபோதும் நாங்கள் இந்த மாணிக்கப்பூரை கனவிலும் நினைக்க மாட்டோம் . இங்குவந்து கொள்ளையடிக்கும் எண்ணத்தை இப்போதே மறந்துவிட்டோம் . இது உண்மை என்று சத்தியம் செய்கிறோம் . உறுதியும் தருகிறோம் . மனதிரங்கி எங்களைக் காப்பாற்றுங்கள் " என்று பரிதாபத்துடன் கெஞ்சி மன்றாடினார்கள் . ஆண்டவர் அவர்கள் தங்கள் படையிடம் அவர்கள்மீது எக்காரணம் கொண்டும் ஆயுதப்பிரயோகம் செய்யாதபடி தடுத்துவிட்டு கொள்ளையர்களைப் போகும்படி சொன்னார்கள் . கொள்ளையர்கள் பிழைத்ததே பாக்கியம் என்று வந்தவழியே ஓடினார்கள் . பிறகு ஆண்டவர் அவர்கள் தங்கள் குதிரைப்படையை வந்தவாறே போக உத்தரவிட்டு தங்கள் வீட்டுவாசலில் வந்து குதிரையை விட்டு இறங்கி உள்ளே புகுந்தார்கள் . இதற்குள் நடுஜாமம் ஆயிற்று . இவ்வளவையும் தாயாராகிய அன்னை பாத்திமா வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள் . வீட்டுக்குள் புகுந்த ஆண்டவர் அவர்கள் தாயார்முன் மறுபடியும் போய்நின்று ஸலாம் சொல்லி "அம்மா ! நான் தங்கள் வயிற்றிலிருந்து பிறக்கும் நாள் நெருங்கிவிட்டது " என்று சொல்லிவிட்டு வயிற்றுக்குள் மறைந்தார்கள் . இந்த அற்புத காட்சிகள் அனைத்தையும் கண்கூடாய் கண்ட அன்னை பாத்திமா ஆனந்தமும் ஆச்சர்யமுமடைந்து , பொழுது விடியும்வரையும் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள் .

No comments:

Post a Comment