alangaara vaasal

Tuesday, February 12, 2013

ஞானகுருவைத் தேடி நாகூர் ஆண்டவர்கள்


ஹஜ்ரத் சாஹுல் ஹமீது நாகூர் ஆண்டவர்கள் தீனுல் இஸ்லாமுடைய இல்முகள் எல்லாவற்றிலும் கரைகண்டவர்களாய் , மூமீன்களுக்கெல்லாம் நாயகமாய் விளங்கிவரும் காலத்தில் அவர்களுக்கு வயது பதினெட்டு நிரப்பமாய் இருந்தது . பாதின் , லாஹிர் என்னும் அகம் , புறம் ஆகிய இருவகை பொருள்களையும் , உலக ஆதி சிருஷ்டிகளின் அந்தரங்கம் , பகிரங்கங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிப்போல காணத்தக்க பக்குவமடைந்தார்கள் .இம்மையில் நடந்துக்கொள்ள வேண்டிய முக்கியக்கடமைகள் இன்னவை என்றும் , மறுமையில் பெறவேண்டியது இன்னது என்றும் , இம்மையில் இன்னது செய்தால் , மறுமையில் இன்னது கிடைக்கும் என்றும் நன்கு அறிந்தார்கள் . பிறகு அல்லாஹ்வை உள்ளப்படி அறிய வேண்டியது ஒன்று மட்டும் மீதி இருந்தது . அதனால் , அவர்கள் இதயத்தில் அல்லாஹ்வை அறியும் ஆசை குடிக்கொண்டது .
ஆண்டவரவர்களுக்கு ஆசைப் பிறந்தபோது " நிலத்தையும் , நீரையும் வைத்திருக்கும் ஒருவர் அந்நிலத்தில் விதைத்து  நீர்ப்பாய்ச்சி , பயிராக்கி பலன் அடையத்தக்க விதையில்லாமல் இருப்பாராயின் அவர் என்னப்பலனை அடையப்போகிறார்  ? ஒன்றுமில்லை . அப்படியே நாமும்  அல்லாஹ்வை அறிவதற்கு சாதனங்களாகிய ரூஹையும் , உடலையும் , அறிவையும் வைத்திருக்கிறோம் . இருந்தாலும் , இவற்றில் விதைத்துப் பலன் பெறக்கூடிய விதை நம்மிடம் இல்லை . அந்த விதையாவது , தக்க ஆசிரியரால் உபதேசிக்கப்படும் உபதேசம் . அந்த உபதேசத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் . அதற்காக ஒரு ஆசிரியரை தேடிப்போக வேண்டும் " என்று நினைத்தார்கள் . ஞானகுருவைத் தேடும் இந்த உத்தம எண்ணம் அவர்கள் இதயத்தில் வேரூண்டிற்று . தங்கள் பதினெட்டாம் வயதில் பிறந்த இந்த மேலான எண்ணத்தினால் ஆண்டவரவர்கள் தூண்டப்பட்டு , ஒரு நாள் தங்கள் தாய்தந்தையிடம் போய் பணிந்து நின்று , "என்னை அன்போடு பெற்றெடுத்த என் அருமையான பெற்றோர்களே !! இப்போது நான் சொல்லும் சொற்களை நீங்கள் கவனமாய் கேளுங்கள் . இவ்வுலகத்தில் ஒருவர்  எவ்வளவுப்பெரிய பாக்கியவனாக இருந்தாலும் எவ்வளவுப்பெரிய கல்விமானாக இருந்தாலும் தரையில் பரந்து கிடக்கும் மணல்களையும் , வானத்திலிருந்து பெய்யும் மழை துளிகளையும் அளவிட்டுசொல்ல வல்லவனாக இருந்தாலும் மறைந்த பொருள்களைஎல்லாம்  தெரியக்கூடியவனாக இருந்தாலும் அல்லாஹ்வை   அறியாதவராக இருந்தாரானால் , அவர் பிரயோஜனமில்லாதவர் ஆவார் . மனிதனாய் பிறந்த எவரும் கண்ணுக்கு இனிமையான காட்சிகளைக் காணவும் , காதுக்கு இனிமையான கீதங்களை கேட்கவும் , மூக்குக்கு இனிமையான நறுமணங்களை நுகரவும் ,  நாவிற்கு இனிமையான பண்டங்களை புசிக்கவும் , சரீரத்திற்கு இனிமையான பெண்களின் ஸ்பரிசத்திற்காக ஆசைக் கொண்டு தன் உணர்வுகளை அல்லாஹ்வை அறியும் ஞான சம்பந்த விசயங்களில் செலவிடாமல் , இவ்வுலக இச்சையில் செலவிட்டு நிற்பாரானால் , அவர்  எத்தனை நூல்களைக் கற்று தெளிந்தவராக இருந்தாலும் , மோட்சத்தை அடையமாட்டார் என்பது நன்றாக தெரிந்த விஷயம் . இவ்வுலக வாழ்வை மோகம் கொண்டு , அல்லாஹ்வை அறியும் விஷயத்தில் தலையிடாமல் , வாழ்நாளை வீணாக்கி மறைந்த பின்பு மிகவும் வருந்த நேரிடும் . இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் நாம் இங்கே வந்தது எதற்காக ? என்பதை அறிந்து , அல்லாஹ்வை வணங்கி , அவன் கூறிய காரியங்களை செய்வது கடமையாகும் .இது அல்லாமல் , இவ்வுலக வாழ்வை வீணாக்கி , மறைந்த பின்பு கைசேதமும் அனுபவிக்கும் துன்பமும் சொல்ல தேவைத்தானா ?? இவ்விஷயங்களில் நமக்கு தெளிவுபெற ஒரு ஞான சற்குரு அவசியம் வேண்டும் . குருவில்லாத எவரும் கண் இல்லாத குருடருக்கு சமம் ஆவார் . என் அருமை பெற்றோர்களே !! ஒருவர் இம்மையில் அல்லாஹ்வை அறியாதவராக இருந்தால் , அவர் மறுமையில் நஷ்டம் அடைந்தவராக இருப்பார் . அதனால் , சிருஷ்டியான என்னை சிருஷ்டிகனாகிய அல்லாஹ்வை எனக்கு தெளிவாய் உணர்த்தக்கூடிய ஒரு உத்தம ஞானகுருவை நான் தேடி அந்த சற்குருவின் உபதேசத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் " என்று சொன்னார்கள் . 
பெற்றோர்கள் இருவரும் மனமகிழ்ந்து மைந்தரை நோக்கி , " எங்கள் கண்மணியான அருமை மகனே !! உங்கள் காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு அவன்புறம் முகம்வைத்து இன்றைக்கே குருவைத் தேடி புறப்படுங்கள் . குருவைத் தேடி நீங்கள் வேறு எங்கும் போகவேண்டாம் . குவாலியர் என்னும் ஊரில் அவ்லியாக்களும் சிறந்த மஷாயிக்குகளும் அதிகம்பேர் இருக்கின்றார்கள் . அங்கே போனீர்களானால் அல்லாஹ் உங்களுக்கு ஞானகுருவை தரக்கூடும் . அவனுடைய பாதுகாப்பில் புறப்படுங்கள் " என்று ஆசிர்வதித்து , உத்தரவு கொடுத்தார்கள் . ஆண்டவர்களும் தங்கள் பயணத்திற்காக , வழித்துணை , வழிச்செலவுக்கான பொருள் ஒன்றும் கேட்கவில்லை . தன்னந்தனியே ஞானகுருவைத் தேடி புறப்பட்டார்கள் .
ஹிஜ்ரி 928ஆம் வருஷம் ஜமாதுல் ஆஹிர் மாதத்தில் ஒரு திங்கள்கிழமை அன்று மாணிக்கப்பூரைவிட்டு குவாலியருக்கு புறப்பட்டார்கள் .    

No comments:

Post a Comment