alangaara vaasal

Saturday, February 16, 2013

திருடர்களைத் திருத்திய நாகூர் நாயகம்

நாகூர் நாயகம் அவர்கள் முயீனுதீன் அவர்களோடு குவாலியரை நோக்கி காட்டில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென்று வழிமறித்த நான்கு திருடர்கள் , " உங்களிடம் உள்ள பொருள்களையெல்லாம் கொடுத்துவிட்டு பேசாமல் போய் விடவேண்டும் . இல்லையேல் எங்கள் கைகளில் உள்ள இந்த வாளினால் உங்களை கொன்றுவிடுவோம் " என்று வாட்களைக் காட்டி மிரட்டினார்கள் . இதைக் கண்ட ஆண்டவர் அவர்கள் அந்த திருடர்களைப் பார்த்து , " நாங்கள் உடுத்தியிருக்கும் இந்த உடையைத் தவிர வேறொன்றும் எங்களிடம் இல்லை . அப்படி நாங்கள் ஒன்றையும் நாளைக்கு என்று வைத்துக்கொள்ளவும் மாட்டோம் " என்று சொன்னார்கள் . இதைக் கேட்ட திருடர்கள் ,, " அப்படியா ?? அந்த உடைகளையாவது களைந்து கீழே வையுங்கள் " என்று சொன்னார்கள் . அதற்கு ஆண்டவர் அவர்கள் , " அந்த உடைகளை நாங்கள் களைந்தால் நாங்கள் நிர்வாணம் ஆகிவிடுவோம் . பிறர் காணும்படி நாங்கள் அப்படியிருப்பது ஹராமாயிருக்கும் . அந்த ஹராமான காரியத்தை நாங்கள் செய்யமாட்டோம் " என்று சொன்னார்கள் . இதைக் கேட்ட திருடர்கள் கோபம் கொண்டு கைகளில் இருந்த வாளினால் ஆண்டவர்களை வெட்டினார்கள் . அந்த வெட்டுக்கள் அனைத்தும் மேகத்தை ஊடுருவுவது போல போனதோடு அல்லாமல் திருடர்கள் வெட்டிய ஒவ்வொரு வெட்டும் அவனவன் உடம்பில் பட்டு நான்கு திருடர்களும் தரையில் விழுந்தனர் . 
இந்த நான்கு திருடர்களையும் அனுப்பிவிட்டு ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற திருடர்களின் கண்களுக்கு , இந்த நால்வரையும் ஹழ்ரத் ஆண்டவர் அவர்களே வெட்டி வீழ்த்தியது போல் தோன்றிற்று . அதனால் அவர்கள் அதிக கோபத்துடன் ஆண்டவர் அவர்களை நோக்கி ஓடிவந்து , வாட்களால் ஆண்டவர்களை பலமுறை வெட்டினார்கள் . அந்த  வெட்டுக்கள் ஒன்று கூட ஆண்டவர்களின் மேலே படாமல் திருடர்கள் மேலேயே பட்டு காதறுந்தும் கையறுந்தும் தோளறுந்தும் சின்னாபின்னப்பட்டு தரையில் விழுந்தார்கள் . 
திருடர்கள் அனைவரும் ரத்தக்காயப்பட்டு விழுந்தபோது , அங்கே அழுகுரலும் அமளியும் உண்டாயின . காடு அதிர கத்திய அவர்களின் கூக்குரல் வெகுதூரம் கேட்டது . அந்தக் காட்டில் ஒரு பகுதியில் குடிசைகள் கட்டிக் குடியிருக்கும் திருடர்களின் குடும்பத்தினருக்கு இந்த அமளியான சத்தம் கேட்டவுடன் அனைவரும் பதறியடித்து ஓடிவந்து தங்கள் சாதியார் அனைவரும் குற்றுயிராய் விழுந்து கிடப்பதைப் பார்த்து அருகில் நிற்கும் ஆண்டவர்களிடம் விசாரித்தார்கள் . அப்போது ஆண்டவர்களின் மகத்துவமே இப்படி ஆக்கிற்று என்று அவர்களுக்கு நன்றாகவே விளங்கியது . உடனே அவர்கள் எல்லோரும் அஞ்சி ஆண்டவர்களிடம் தங்கள் இனத்தார் செய்த பிழையை பொறுக்கும்படி கெஞ்சினார்கள் . தங்கள் மகத்துவத்தை அறியாமல் புத்தி கெட்டு வெட்டுபட்டு கிடக்கும் இவர்களை தாங்கள் மனமிரங்கி சுகபடுத்தி அருள வேண்டும் என்று சொன்னார்கள் .
துன்பம் செய்வோருக்கு இன்பமே செய்யும் நாகூர் ஆண்டவர்கள் , சிறியோர் செய்த பிழையை பெரியோர் பொறுப்பது உத்தமமான காரியம் என்பதை உலகத்தாருக்கு உண்மையாக்குவதுபோல் அவர்கள்மீது மனமிரங்கி அறுந்து கிடந்த உறுப்புக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பொருத்தி அவர்கள்மேல் தங்கள் உமிழ்நீரைத் தடவி அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி இவர்களுக்கு சுகம் புரிவாயாக என்று துஆச் செய்தார்கள் . அந்த நிமிடமே வெட்டுதழும்பு இல்லாமல் அனைவரும் மீண்டார்கள் , 
இந்த அதிசயங்களை கண்ட திருடர் கூட்டம் பிரமித்துப் போய் நின்றார்கள் . அப்போது ஆண்டவர்கள் அவர்களை பார்த்து , " நீங்கள் தீனுல் இஸ்லாம் என்கிற பரிசுத்த மார்க்கத்தை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் . உங்களுக்கு இம்மையிலும் , மறுமையிலும் நல்ல பலன் கிடைக்கும் என்று பல அறிவுகளையும் போதித்தார்கள் . அந்த போதனை அவர்கள் இருதயங்களில் புகுந்த அஞ்ஞான இருளை அறவே போக்கி மெய்ஞ்ஞான சுடரை ஏற்றி வேரூன்றிப் பதித்தது . உடனே அந்த கூட்டத்தார் ஆண்டவரவர்களின் கரம் பிடித்து கலிமா சொல்லி இஸ்லாமானார்கள் .
திருடர்கள் அனைவரும் முஸ்லிமானபோது ஆண்டவர்கள் அவர்கள் கூடவே இருந்து மார்க்க சம்மந்தமான அறிவுகளை 40 நாட்கள் கற்பித்துக் கொடுத்துவிட்டு , அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்து அங்கிருந்து புறப்பட்டு , முயீனுதீனுடன் குவாலியரை நோக்கி நடந்தார்கள் . அங்குள்ள திருடர்கள் ஆண்டவர்களின் துஆ பரக்கத்தால் நேர்வழி பெற்று சாலிஹான பெரியோர்களாகி விட்டார்கள் . 
       

No comments:

Post a Comment