தொடர்ந்து ஆவலோடு ஆண்டவர் அவர்களின் வரலாற்றைப் படிக்கும் அன்பிற்கினியவர்களே !! ஆண்டவர் அவர்கள் தாயின் கருவில் இருக்கும்போது தந்தை அவர்கள் கடுமையான நோய்வுற்றார்கள்.அந்த நோயிலிருந்து தப்பிப் பிழைப்பார்களா ?? என்று மனங்கலங்கி அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள் . இப்படி இருக்கும்போது ஒருநாள் அவர்களின் வயிற்றிலிருந்து ஆச்சர்யமான ஒரு சத்தம் வந்தது . "அன்னையே!! தாங்கள் அஞ்சாதீர்கள் . என் தந்தை இந்த வியாதியால் இறந்துவிட மாட்டார்கள் . இன்றைய தினமே பரிபூரண குணமடைவார்கள் . அந்த சத்தத்தின்படி அன்றைய தினமே சுகம் அடைந்தார்கள் . தந்தை தாய் இருவரும் சிசுவின் வாய்மொழிக்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் . இதுபோல ஒருமுறை மாணிக்கப்பூரில் கடும் பஞ்சம் பிடித்தது . பாக்கியவான்கள் கூட பட்டினி கிடக்க நேர்ந்தது . நெடுநாள் மழையின்றி ஏரி,குளம்,கிணறு அனைத்தும் வற்றி வறண்டன . குடிக்க தண்ணீரின்றி விலங்குகளும் மனிதர்களும் மாண்டார்கள் . ஆண்டவர் அவர்களின் பெற்றோர்கள் இருவரும் ஆகாரமின்றி மூன்று நாள் வரையும் பட்டினியாய் இருந்தார்கள் . ஆயினும் இபாதத்தில் பலத்தோடு கொஞ்சமும் சளைக்காமல் இருந்தார்கள் . பஞ்சம் தொலைந்து தங்கள் ஊர்மக்கள் பசியால் வருந்தாதபடி சுகம்பெறும் பொருட்டு தினமும் அல்லாஹ்விடம் மன்றாடிக் கொண்டு இருந்தார்கள் . ஒருநாள் அன்னை பாத்திமாவின் வயிற்றிலிருந்து ஒரு சத்தம் வந்தது . " என் அருமையான பெற்றோர்களே !! இந்த பஞ்சத்தைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் . நம் வீட்டுக் களஞ்சியத்தைப் பாருங்கள் . அதில் தானியங்கள் இருக்கும் . கொஞ்சமாக இருந்தாலும் அதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போட்டு உணவாக்கி பிறருக்கும் கொடுத்து நீங்களும் உண்ணுங்கள் . அது ஒருநாள் முழுதும் எல்லோர்க்கும் போதுமானதாக இருக்கும் . பஞ்சம் தீரும்வரை நாள்தோறும் களஞ்சியத்தில் தானியம் இருக்கும் . அதை அன்றாடம் எடுத்து அனைவருக்கும் கொடுங்கள் ". தங்கள் அருமை பாலகர் வயிற்றிலிருந்துக்கொண்டு சொன்ன உத்தம வசனத்தைக் கேட்டு உடனே எழுந்துபோய் களஞ்சியத்தைப் பார்த்தார்கள் . ஒரு பிடி அளவே தானியம் இருந்தது . அதை எடுத்துவந்து பெரிய செப்புப் பாத்திரத்தில் போட்டு சோறு ஆக்கினார்கள் . அது அதிகம் பேர் பசியைப் போக்கியது . பாத்திரம் நிரம்பி இருந்தது . அன்னை பாத்திமா அவர்கள் தங்கள் சுற்றத்தார் , அன்னியர் , எளியோர் எல்லோருக்கும் கொடுத்து தாங்களும் கணவரும் உண்டார்கள் . இதுபோல பஞ்சம் தீரும்வரை கொடுத்து வந்தார்கள் . சில தினங்களில் பஞ்சம் தீர்ந்து ஊர் செழிப்படைந்தது .
No comments:
Post a Comment