alangaara vaasal

Friday, February 22, 2013

பேயை விரட்டிய நாகூர் ஆண்டவர்கள்

அன்பிற்கினியவர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் ,சமாதானமும் நிலவட்டும் !இன்று நம் தாஜுல் ஔலியா  கௌசுல் ஆலம் முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் நினைவு நாள் .அண்ணலாரின் ஆஷிகீன்கள் அவர்களை நினைவு கூர்ந்து துவா செய்யும் நாள் .இந் நன்னாளில் நம் அனைவருக்கும் வளமான வாழ்வை அல்லாஹ் தந்தருள்வானாக!ஆமீன்!
ஹஜ்ரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள் பஸ்தாம்  நகரில் நுழைந்து அங்குள்ள ஒரு பள்ளியில் தங்கி இருந்தார்கள்.ஒரு நாள் அந்த  ஊரை சேர்ந்த மலிக்குதுஜ்ஜாரி என்பவர் ஆண்டவரவர்களிடம் வந்து சலாம் சொல்லி,"எஜமானே!என் மனைவியை கடந்த ஐந்து வருடகாலமாக ஒரு பேய் பிடித்து வாட்டிகொண்டு வருகிறது.அதனால் அவள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல என்ன பரிகாரம் செய்தும் அது விலகவில்லை. நாள் முழுவதும் அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையால்,நானும்,என்குடும்பத்தினரும் ,பரிதவித்து வருகிறோம்.எங்களுக்கு நல்ல உணவு ,நல்ல உறக்கம் இல்லை. அவள் சரீரமெங்கும் எரிச்சலும்,குத்தலும்,இசிவும்,அலறுதலும்,புலம்புதலும் ஓய்வில்லாமல் இருக்கின்றன.அதற்காக பக்குவம் பண்ணினால், இவை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை .பார்ப்பவரும்,கேட்பவரும் பரிதாபப் படக்கூடிய வேதனையாக இருக்கிறது."என்று சொல்லி முறையிட்டார்.
மலிக்குதுஜ்ஜாரி இவ்வாறு சொல்லி அழுததும் ,அதைக் கேட்ட ஆண்டவர் அவர்கள் மலிக்குதுஜ்ஜாரியே ! நீங்கள் போய் உங்கள் மனைவி அருகில் நின்று, 'ஹிப்பத்து  என்னும்  பேயே ! இப்போதே  நீ  இவளை விட்டு புறப்படு ,உன் பிறப்பிடம் போய்ச் சேர். எளிதாய் போய்விடுவதே உத்தமம். இல்லையேல், துன்புறுத்தி விரட்டப்படுவாய். அதனால் நீயாகப் போய் விடு , நீ போன பின் இனி யாரையும் பிடித்து வருத்தாதே! என்று செய்யது அப்துல் காதிரு சொன்னார்கள் என்று அவளுடைய காதில் ரகசியமாக சொல்லுங்கள் என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இதைக் கேட்ட மலிக்குதுஜ்ஜாரி சந்தோசமாய் வீட்டுக்கு வந்து ,மனைவி அருகேப் போய் ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் சொல்லி கொடுத்தப்படி அவள் காதில் ரகசியமாக சொன்னார்.ஒருபோதும் உருவேறாத அந்தப் பேய் உருக்கொண்டு ,அவரை அழைத்து பயங்கரமாக கீழ் வருமாறு சொல்லியது;
"ஏ ,மலிக்குதுஜ்ஜாரியே ! நான்தான் ஹிப்பத்து என்னும் பேய் என்பதை தெரிந்து கொண்டாயோ? ஆம், நான் ஹிப்பத்து தான்,உன் மனைவியை நான் அநியாயமாகப் பிடித்துக் கொள்ளவில்லை. இவளுடைய பாட்டன் அமீறேன்பவன், என் சொத்துக்களை பலவந்தமாக அபகரித்துக் கொண்டு ,என்னையும் கொன்றுவிட்டான். ஆகையால், நான் அவன்  மீது  ஏறி பிடித்து, அவனைக் கொன்று, பின் அவன் சந்ததிகளைத் தொடர்ந்து ஒவ்வொருவராக பிடித்து கொன்று வருகிறேன். அதுப்போலவே அவனுடைய பௌத்ரியாகிய இவளையும் பிடித்துக் கொண்டேன். இன்னும் சொற்பக் காலத்தில் இவளையும் கொன்று விடுவேன்.ஆனால், இன்று முதல் நான் இவளை வதைக்கவும், கொல்லவும் இடமில்லை. இன்றைக்கே புறப்பட சொல்லி கட்டளை வந்துவிட்டது. இதோ,நான்  என் இருப்பிடம் செல்கிறேன். இவள் நிமித்தம் இனி யாரையும்  பிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கின்றேன்".
என்று சொல்லிவிட்டு, அந்தப்  பேய் உடனே அவளை விட்டு புறப்பட்டு சென்றது . அப்போதே அவளுக்குள்ள அனைத்துப்  பிரச்சினைகளும் தீர்ந்து சுகமானாள் . இடைக் கண்ட மலிக்குதுஜ்ஜாரியும், ஆச்சரியமாய் சந்தோஷப்பட்டு ஆண்டவர் அவர்களை புகழ்ந்து அல்லாஹ்வுக்கு  நன்றி செலுத்தினார்கள்.

Tuesday, February 19, 2013

ஆணவம் கொண்டவருக்கு கொம்பு முளைத்தது


அன்பிற்கு இனியவர்களே !!! தொடர்ந்து நாகூர் ஆண்டவர்களின் சரித்திரத்தை பக்தியோடு படித்து வரும் பிரியமானவர்களே!! உங்கள் அனைவருக்கும் நாகூர் ஆண்டவர்களின் ஆசி நிலைக்கட்டுமாக !!!நீங்களோ ,உங்களை சார்ந்தவர்களோ நாகூர் வர இருந்தால் அவசியம்  என்னைத் தொடர்புக் கொள்ளுங்கள் .தர்கா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து தரவும் யாருக்கேனும் மனதளவிலோ உடலளவிலோ தீராத பிரச்சனைகள் இருந்தாலும் சொல்லுங்கள் . உங்களுக்காக பாதுஷா நாகூர் ஆண்டவர்களின் தர்பாரிலே துஆச் செய்து தப்ரூக் அனுப்பி வைக்க காத்திருக்கிறேன் .எனது செல் நம்பர் +91 98941 25478 . சரி! நம் பாதுஷா நாயகத்தின் சரித்திரத்தை தொடருவோம் .  
 நாகூர் நாயகம் அவர்கள் முஈனுதீன் அவர்களுடன் மலை ,நதி ,வனம் ,வனாந்திரங்களை எல்லாம் கடந்து குவாலியரை நோக்கி நடந்து போகிற போது பஸ்தாம் என்னும் நகரம் எதிர்ப்பட்டது .அந்நகரின் வெளிப்புறத்தில் ஒரு அகன்ற நதி ஓடியது .ஆண்டவர்கள் அந்நதிக்கரையை அடைந்தபோது சூரியன் அஸ்தமித்தது .                                                                                                  பொழுதுபட்டபோது ,நோன்புதிறந்து பசியாறுவதற்கான எந்த உணவும் அவர்களிடம் இல்லை .உணவு தேடிக்கொள்ள எந்த வசதியும் இல்லை. அதனால் ஆண்டவரவர்கள் கைகளை ஏந்தி , அல்லாஹ்விடம்  துவாச் செய்தார்கள் .உடனே வானத்திலிருந்து இரண்டு ரொட்டியும் தண்ணீரும் இறங்கியது .அதை இருவரும் பகிர்ந்து நோன்பை திறந்து பசியாறினார்கள் .அதன் பிறகு ஒரு மரத்தின் கீழ் ஆண்டவர் அவர்கள் அல்லாஹ்வைத் தொழுது அன்று இரவு முழுவதும் இபாதத் என்னும் வணக்கத்தில் ஈடுபட்டார்கள் .           பின்பு பஜ்ரு நேரம் வந்தது .ஆண்டவர்கள் பஜ்ரு தொழுதுவிட்டு ஆற்றைப் பார்த்தார்கள் .வெள்ளம் கரைப் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. 
ஆற்றைக் கடந்தால் மட்டுமே பஸ்தாம் சென்றடைய முடியும் .ஆண்டவர் அவர்கள் சற்று யோசித்து ,அங்கிருந்த ஆலமரத்தின் ஒரு இலையை பறித்து சில அஸ்மாக்களை ஓதி அதில் ஊதி ,அதை ஆற்றில் எறிந்தார்கள் .அந்த இலையானது உடனே ஒரு வள்ளமாய் மாறி ஆற்றில் மிதந்தது .                    ஆலிலை வள்ளமானபோது ஹஜ்ரத் ஆண்டவரவர்கள் முயீனுதீனை அழைத்துக்கொண்டு அதில் ஏறி உட்கார்ந்தார்கள் .அந்த வள்ளம் அக்கரை நோக்கி ஓடத் தொடங்கியது .வேகமெடுத்து ஓடிய அந்த வள்ளம் ஆற்றின் நடுவிற்கு வந்தபோது ,பிரவாகித்து ஓடும் அந்த ஆறு திடீரென்று கொந்தளித்தது .காற்றும் வேகமாக வீசியதால் ஆண்டவர்கள் வந்த வள்ளம் கவிழக்கூடிய நிலையில் இருந்தது .இதைக் கண்ட ஆண்டவர்கள் திடீரென்று ஏற்பட்ட ஆபத்தை நீக்குவதற்காக தங்கள் இருகரம் ஏந்தி அல்லாஹ்விடம் துவா கேட்டார்கள் .அவர்கள் துவா கேட்க ஆரம்பித்த உடனேயே ,காற்றின் வேகம் தணிந்தது கொந்தளிப்பு அடங்கி,அலை ஒடுங்கி ,ஆறு சாந்தமாயிற்று .அதனால் ,வள்ளம் நேராய்,முன் போல அக்கரை நோக்கி சீராய் ஓடிற்று .கரை வந்தவுடன் ஆண்டவரவர்கள் முஈனுதீனுடன் வள்ளத்திலிருந்து இறங்கினார்கள் உடனே,வள்ளம் பழைய ஆலிலையாய் மாறி ஆற்றில் மிதந்து போயிற்று .                                                                                                                                    கரையில் இறங்கிய ஆண்டவரவர்கள் லுஹர் நேரமாகிவிட்டதால் தோழருடன் ஒளு செய்துக் கொண்டு தொழுது விட்டு ஒஜீபா ஓதிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் .அப்போது ஒரு முஸ்லிமான கூட்டத்தார் ஆண்டவரவர்கள் சமூகத்தில் வந்து நின்று சலாம் சொல்லி ,இதன் கீழ்வருமாறு சொல்லத் தொடங்கினார்கள்.;-                                                                  "எஜமானவர்களே ! இந்த பஸ்தாம் நகரில் ஷெய்கு நஜீமுதீன் என்ற பெரியவர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் பல கறாமாத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி ஜதபு வருகிற காரணத்தினால் நகரில் இல்லாமல் இந்த ஆற்றங்கரையில் வசித்து வருகிறார்கள்.நேற்று அவர்கள் ஜன்னலிலிருந்து வெளியே ஆற்றின் பிரவாகத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தப்போது அவர்கள் தலையில் கொம்பு முளைத்து கிளைவிட்டு ஜன்னலில் படர்ந்துக் கொண்டது அதனால் தலையை உள்ளே இழுக்க முடியாமல் தவிக்கிறார் . அவரைப் பார்ப்பதற்காக நகரின் பெரிய மனிதர்கள் அனைவரும் வந்துக் கூடி அவருக்கு ஏற்ப்பட்ட அதிசயத்தை ஆச்சரியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அந்தப் பெரியவர் வந்தவர்களைப் பார்த்து ,"என் நேசர்களே !!! எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கு காரணம் உங்களுக்கு தெரியாது. நான் அறிவேன் .இதிலிருந்து என்னை விடுவிக்க சொல்லி அல்லாஹ்விடம் மன்றாடினேன்.       
அதற்கு, "நஜீமுதீனே! உம் பாவம் பொறுக்கப்பட்டது ஆனாலும் நீர் யாருக்கு இந்தப் பிழையை செய்தீரோ, அவர்தான் சையிது அப்துல் காதிறு ,அவரிடம் மன்னிப்பு கேட்பதில் பிரயாசை எடுத்துக்கொள்வீராக !என்றுக் கட்டளையிட்டான் .அந்த சையிது அப்துல் காதிறு என்பவர்  இப்போது இந்த ஆற்றங்கரையில் இன்ன இடத்தில தொழுதுவிட்டு ஓதிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் போய் சலாம் சொல்லி என் நிலையை அறிவித்தால் அவர் மனமிரங்கி என் அருகில் வந்து துவாச் செய்வார் அப்போது இந்த ஆபத்து என்னை விட்டு நீங்கிவிடும் "என்று சொல்லி எங்களை தங்கள் சமூகத்திற்கு அனுப்பி தங்களை அழைத்து வர சொன்னார் " என்றார்கள் .                                                                                                          இதைக் கேட்ட ஆண்டவரவர்கள் " ஆ! அப்படியா! " என்று விரைந்து எழுந்து ,அவர்களோடு நஜீமுதீனுடைய இடத்திற்கு போனார்கள் .அங்கே ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். அங்கே நமது நாயகமவர்கள் நஜிமுதீன் தலையில் கொம்பு முளைத்து மாட்டிக்கொண்டு பாடுபடுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு ,அவரை நோக்கி, ஷெய்கே! இதென்ன காரியம் என்று கேட்டார்கள் . அப்போது அவர்கள் ஆண்டவர்களைப் பார்த்து , " என்  சகோதரரே !! நீங்கள் வள்ளத்தில் ஏறிக்கொண்டு நடு ஆற்றில் வரும்போது ,உம்மை நான் சோதிக்கவேண்டுமென்று ஆற்றை கொந்தளிக்க வைத்து வள்ளத்தை புரண்டுப் போக செய்தேன் .அப்போது நீங்கள் செய்த பதுவாவினால் என் தலையில் இந்த கொம்புகள் முளைத்தன .அதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் மன்றாடினேன் அதற்கு அவன் இந்த கேடு உங்களிடம் மன்னிப்பு கேட்பதால் மட்டுமே தீரும் என்று கட்டளையிட்டான். ஆகையால் செய்யிது அப்துல் காதிறு அவர்களே !! நீங்கள் என்னை மன்னித்து ரட்சிப்பீராக! ", என்று மிகவும் பணிவோடு வேண்டினார்.                                                  
ஹஜ்ரத் ஆண்டவரவர்கள் மனமிரங்கி ,தங்கள் வலது கையை தூக்கி ஷெய்கு நஜிமுதீன் தலையில் முளைத்திருக்கும் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் வைத்தார்கள்.அந்த கொம்புகள் இரண்டும் சுருங்கி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின. நஜிமுதீன்அவர்கள்  ஆண்டவரவர்களை கட்டித்தழுவி , மரியாதை செய்து தன் பீடத்தில் அமரும்படி பணித்தார் .  
ஷெய்கு நஜிமுதீன் அவர்கள் தம் மாளிகையில் வந்து , கூடியிருக்கும் மக்களைப் பார்த்து , " என் நேசர்களே !! நீங்கள் எல்லோரும் இவருக்கு மரியாதை பண்ணுங்கள் . இவர் , அல்லாஹ்வுக்கு மிகவும் நேசரானவர் . இனிமேல் , குத்புகளுக்கெல்லாம் குத்பு ஆவார்; மனிதர்களையும்,ஜின்களையும்.இரட்சிக்கும் கௌது ஆவார்;அவ்விரு கூட்டத்திற்கும் நேர்வழி காட்டுவார் .இவருடைய கராமாத்துக்கள் இனி கியாமத்து உண்டாகும் வரை நிலைபெற்றிருக்கும் இவருடைய ஜீவிய காலத்தில் இவரை நாடினவர்களை இவர் ரட்சிப்பதுப் போல் மரணத்திற்குப் பின்னும் இரட்சிப்பார் .இவரை பின் தொடர்ந்த மனிதர்களும்,ஜின்களும் அச்சமற்று இருப்பார்கள்.என்று சொல்லி காட்டினார்.                                                        நாகூர் ஆண்டவர்களின் தர்காவிலே,இன்றளவும் எத்தனை மக்கள் தம் துன்பம் தீர்ந்து மனமகிழ்ச்சியாக சந்தோசமாக தன் குடும்பத்தாரோடு வந்து ஆண்டவர்களை தரிசித்து செல்கிறார்கள் என்பதை இந்த உலகமே அறியும் .

Saturday, February 16, 2013

திருடர்களைத் திருத்திய நாகூர் நாயகம்

நாகூர் நாயகம் அவர்கள் முயீனுதீன் அவர்களோடு குவாலியரை நோக்கி காட்டில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென்று வழிமறித்த நான்கு திருடர்கள் , " உங்களிடம் உள்ள பொருள்களையெல்லாம் கொடுத்துவிட்டு பேசாமல் போய் விடவேண்டும் . இல்லையேல் எங்கள் கைகளில் உள்ள இந்த வாளினால் உங்களை கொன்றுவிடுவோம் " என்று வாட்களைக் காட்டி மிரட்டினார்கள் . இதைக் கண்ட ஆண்டவர் அவர்கள் அந்த திருடர்களைப் பார்த்து , " நாங்கள் உடுத்தியிருக்கும் இந்த உடையைத் தவிர வேறொன்றும் எங்களிடம் இல்லை . அப்படி நாங்கள் ஒன்றையும் நாளைக்கு என்று வைத்துக்கொள்ளவும் மாட்டோம் " என்று சொன்னார்கள் . இதைக் கேட்ட திருடர்கள் ,, " அப்படியா ?? அந்த உடைகளையாவது களைந்து கீழே வையுங்கள் " என்று சொன்னார்கள் . அதற்கு ஆண்டவர் அவர்கள் , " அந்த உடைகளை நாங்கள் களைந்தால் நாங்கள் நிர்வாணம் ஆகிவிடுவோம் . பிறர் காணும்படி நாங்கள் அப்படியிருப்பது ஹராமாயிருக்கும் . அந்த ஹராமான காரியத்தை நாங்கள் செய்யமாட்டோம் " என்று சொன்னார்கள் . இதைக் கேட்ட திருடர்கள் கோபம் கொண்டு கைகளில் இருந்த வாளினால் ஆண்டவர்களை வெட்டினார்கள் . அந்த வெட்டுக்கள் அனைத்தும் மேகத்தை ஊடுருவுவது போல போனதோடு அல்லாமல் திருடர்கள் வெட்டிய ஒவ்வொரு வெட்டும் அவனவன் உடம்பில் பட்டு நான்கு திருடர்களும் தரையில் விழுந்தனர் . 
இந்த நான்கு திருடர்களையும் அனுப்பிவிட்டு ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற திருடர்களின் கண்களுக்கு , இந்த நால்வரையும் ஹழ்ரத் ஆண்டவர் அவர்களே வெட்டி வீழ்த்தியது போல் தோன்றிற்று . அதனால் அவர்கள் அதிக கோபத்துடன் ஆண்டவர் அவர்களை நோக்கி ஓடிவந்து , வாட்களால் ஆண்டவர்களை பலமுறை வெட்டினார்கள் . அந்த  வெட்டுக்கள் ஒன்று கூட ஆண்டவர்களின் மேலே படாமல் திருடர்கள் மேலேயே பட்டு காதறுந்தும் கையறுந்தும் தோளறுந்தும் சின்னாபின்னப்பட்டு தரையில் விழுந்தார்கள் . 
திருடர்கள் அனைவரும் ரத்தக்காயப்பட்டு விழுந்தபோது , அங்கே அழுகுரலும் அமளியும் உண்டாயின . காடு அதிர கத்திய அவர்களின் கூக்குரல் வெகுதூரம் கேட்டது . அந்தக் காட்டில் ஒரு பகுதியில் குடிசைகள் கட்டிக் குடியிருக்கும் திருடர்களின் குடும்பத்தினருக்கு இந்த அமளியான சத்தம் கேட்டவுடன் அனைவரும் பதறியடித்து ஓடிவந்து தங்கள் சாதியார் அனைவரும் குற்றுயிராய் விழுந்து கிடப்பதைப் பார்த்து அருகில் நிற்கும் ஆண்டவர்களிடம் விசாரித்தார்கள் . அப்போது ஆண்டவர்களின் மகத்துவமே இப்படி ஆக்கிற்று என்று அவர்களுக்கு நன்றாகவே விளங்கியது . உடனே அவர்கள் எல்லோரும் அஞ்சி ஆண்டவர்களிடம் தங்கள் இனத்தார் செய்த பிழையை பொறுக்கும்படி கெஞ்சினார்கள் . தங்கள் மகத்துவத்தை அறியாமல் புத்தி கெட்டு வெட்டுபட்டு கிடக்கும் இவர்களை தாங்கள் மனமிரங்கி சுகபடுத்தி அருள வேண்டும் என்று சொன்னார்கள் .
துன்பம் செய்வோருக்கு இன்பமே செய்யும் நாகூர் ஆண்டவர்கள் , சிறியோர் செய்த பிழையை பெரியோர் பொறுப்பது உத்தமமான காரியம் என்பதை உலகத்தாருக்கு உண்மையாக்குவதுபோல் அவர்கள்மீது மனமிரங்கி அறுந்து கிடந்த உறுப்புக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பொருத்தி அவர்கள்மேல் தங்கள் உமிழ்நீரைத் தடவி அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி இவர்களுக்கு சுகம் புரிவாயாக என்று துஆச் செய்தார்கள் . அந்த நிமிடமே வெட்டுதழும்பு இல்லாமல் அனைவரும் மீண்டார்கள் , 
இந்த அதிசயங்களை கண்ட திருடர் கூட்டம் பிரமித்துப் போய் நின்றார்கள் . அப்போது ஆண்டவர்கள் அவர்களை பார்த்து , " நீங்கள் தீனுல் இஸ்லாம் என்கிற பரிசுத்த மார்க்கத்தை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் . உங்களுக்கு இம்மையிலும் , மறுமையிலும் நல்ல பலன் கிடைக்கும் என்று பல அறிவுகளையும் போதித்தார்கள் . அந்த போதனை அவர்கள் இருதயங்களில் புகுந்த அஞ்ஞான இருளை அறவே போக்கி மெய்ஞ்ஞான சுடரை ஏற்றி வேரூன்றிப் பதித்தது . உடனே அந்த கூட்டத்தார் ஆண்டவரவர்களின் கரம் பிடித்து கலிமா சொல்லி இஸ்லாமானார்கள் .
திருடர்கள் அனைவரும் முஸ்லிமானபோது ஆண்டவர்கள் அவர்கள் கூடவே இருந்து மார்க்க சம்மந்தமான அறிவுகளை 40 நாட்கள் கற்பித்துக் கொடுத்துவிட்டு , அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்து அங்கிருந்து புறப்பட்டு , முயீனுதீனுடன் குவாலியரை நோக்கி நடந்தார்கள் . அங்குள்ள திருடர்கள் ஆண்டவர்களின் துஆ பரக்கத்தால் நேர்வழி பெற்று சாலிஹான பெரியோர்களாகி விட்டார்கள் . 
       

Thursday, February 14, 2013

புலிகள் வழிப்பட்ட நாகூர் ஆண்டவர்கள்

ஹழ்ரத் நாகூர் நாயகம் அவர்கள் முயீனுதீன் அவர்களுடன் ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்றுக் கொண்டிருந்தார்கள் . சிறிது நேரம் இளைப்பாறினார்கள் . அப்பொழுது அந்த காட்டில் வசிக்கும் புலிகள் ஆண்டவர் அவர்களிடம் வந்து , மண்டியிட்டு உட்கார்ந்து , " வலியுல்லாஹ்வே !! தாங்கள் எங்கள் முதுகில் ஏறிக்கொண்டு எங்கெங்கு போகவேண்டுமோ அங்கெல்லாம் போகலாம் . இதற்காக நாங்கள் அல்லாஹ்வினால் ஏவப்பட்டிருக்கோம் " என்று வாய்திறந்து பேசியது . இதற்கு ஆண்டவர் அவர்கள் " நான் உங்கள் முதுகில் ஏறிப்போக வரவில்லை . உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வே போதுமானவன் . நீங்கள் உங்கள் வழியில் போகலாம் " என்று சொல்லி அந்தப் புலிகளை அனுப்பிவிட்டார்கள்
ஆண்டவர் அவர்கள் ஆச்சர்யப்பட்டு நின்ற முயீனுதீனைப் பார்த்து , " நீங்கள் நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள் . ஒருவர் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நடந்தால் , அவருக்கு எல்லா படைப்புகளும் வழிப்படுகின்றன . அவர் அல்லாஹ்வைச் சந்தித்து விலாயதையும் பெற்று என்றைக்கும் சந்தோசமாய் இருப்பார் " என்று சொன்னார்கள் . பிறகு அந்த காட்டின் வழியே குவாலியர் நோக்கிச் சென்றார்கள் . 

Wednesday, February 13, 2013

இல்யாஸ் (அலை) - நாகூர் நாயகம் சந்திப்பு

நாகூர் நாயகம் அவர்கள் மாணிக்கப்பூரை விட்டுப் புறப்பட்டு ஞானகுருவை தேடி குவாலியர் போகும்போது ,பாதையில் ஒரு பெரியவர்களை எதிரே வரக் கண்டார்கள் .அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள் .பதில் ஸலாம் சொன்ன அவர்கள் ,நீங்கள் எங்கேப் போகிறீர்கள் ? என்று கேட்டார்கள் .''நான் அல்லாஹ்வின் மேல் ஆசை வைத்து ,முரீதாக வேண்டி ஒரு ஞானகுருவை தேடிக்கொண்டு குவாலியருக்கு போகிறேன். தாங்கள் துவாச் செய்யுங்கள் "என்றார்கள் .அவர்களும் துவாசெய்தார்கள் . அப்போது ஒரு தட்டில் உயர்தர உணவும் ,தண்ணீரும் மேலிருந்து தானாக வந்தது .அப்போது அந்தப் பெரியவர்கள் , ''அல்லாஹ் உங்களை பொருந்திக்கொண்டு உங்களுக்கு விருந்தாக உணவு அனுப்பி இருக்கிறான் .இதை உண்ணுங்கள் "என்று சொன்னார்கள் .நாயகமவர்கள் பிஸ்மி சொல்லி சந்தோசமாக சாப்பிட்டு ,தண்ணீர் குடித்து ,அல்லாஹ்விற்கு நன்றி சொன்னார்கள் .                                                                          

பிறகு ,அந்தப் பெரியவர்கள் ,"செய்யது அப்துல் காதிரே !எந்த கல்விகளையும் புத்தியுடன் தெளிய விளங்கி கற்றுக்கொள்வீராக !! எந்தச் செயலையும் பொறுமையுடன் செய்வீர்களாக !!அவ்லியாக்கள் மற்றும் பெரியவர்கள் சமூகத்திற்கு போனால் அவர்கள் உங்களை நேசிக்கும்படி நடந்துக் கொள்வீராக !! அவர்கள் ஒருவரை நேசித்தால் அல்லாஹ்வும் அவரை நேசிக்கிறான் . அவர்கள் ஒருவரை வெறுத்தால் அல்லாஹ்வும் அவரை வெறுக்கிறான் " என்று சொல்லி , இன்னும் பல அறிவுகளையும் கற்பித்து , இஸ்முல் ஆலம் என்னும் திருமந்திரத்தையும் போதித்தார்கள் . 

இவ்வளவும் நடந்தபின் , ஹழ்ரத் ஆண்டவரவர்கள் அந்தப் பெரியவர்களைப் பார்த்து " தாங்கள் யார் ? என அறிந்துக்கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன் " என்றார்கள் . அதற்கு " நான்தான் இல்யாஸ் (அலை) " என்று சொல்லி , உடனே மறைந்துப் போனார்கள் .
நபி இல்யாஸ் (அலை) அவர்களை சந்தித்து பேசி மறைந்த அப்போதே ஹழ்ரத் ஆண்டவரவர்களுக்கு தங்கள் நப்ஸ் கட்டுப்பட்டது . ஷைத்தானின் ஊசாட்டம் அனைத்தும் தொலைந்தன . ரஹ்மானியத்தின் குணம் மேலிட்டது . அவர்கள் வேலைகள் அனைத்தையும் அன்றைய தினமே அல்லாஹுதஆலா எளிதாக்கினான் . அவர்களை அவன் பொருந்திக் கொண்டான் . குத்பியத் , கௌதியத்களுக்கு அவர்களை பக்குவமாக்கினான் . அவர்கள் இதயம் கலங்கமற்ற கண்ணாடி போல் ஆயிற்று . விலாயத்தின் தன்மை பெற்று ஒலித்தனத்தில் நிரப்பமானார்கள் . அதன்பிறகு ஆண்டவர்கள் அங்கிருந்து குவாலியரை நோக்கி நடந்தார்கள் . சில நாட்களுக்கு பின் , முயீனுதீன் என்பவர் ஹழ்ரத் ஆண்டவரவர்களுக்கு வழித்துணையாய் இடையில் வந்து சேர்ந்தார் .அவரையும் கூட்டிக்கொண்டு குவாலியரை நோக்கி நடந்தார்கள் .
குறிப்பு : ஆண்டவர்களுடன் வந்துசேர்ந்த இந்த முயீனுதீன் தான் பாதுஷா  நாயகத்தின் இரண்டாம் கலீபாவானார்கள் . இவர்கள் நிறைய கறாமாத்துகளை ஆண்டவர்களி தாயாரிடம் நேரில் கேட்டதாகவும் , அநேக கறாமாத்துகளை ஆண்டவர்கள் கூடவே இருந்து பார்த்ததாகவும் தாங்கள் இயற்றிய கன்ஜூல் கறாமாத்து நூலில் சொல்கிறார்கள் .  

Tuesday, February 12, 2013

ஞானகுருவைத் தேடி நாகூர் ஆண்டவர்கள்


ஹஜ்ரத் சாஹுல் ஹமீது நாகூர் ஆண்டவர்கள் தீனுல் இஸ்லாமுடைய இல்முகள் எல்லாவற்றிலும் கரைகண்டவர்களாய் , மூமீன்களுக்கெல்லாம் நாயகமாய் விளங்கிவரும் காலத்தில் அவர்களுக்கு வயது பதினெட்டு நிரப்பமாய் இருந்தது . பாதின் , லாஹிர் என்னும் அகம் , புறம் ஆகிய இருவகை பொருள்களையும் , உலக ஆதி சிருஷ்டிகளின் அந்தரங்கம் , பகிரங்கங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிப்போல காணத்தக்க பக்குவமடைந்தார்கள் .இம்மையில் நடந்துக்கொள்ள வேண்டிய முக்கியக்கடமைகள் இன்னவை என்றும் , மறுமையில் பெறவேண்டியது இன்னது என்றும் , இம்மையில் இன்னது செய்தால் , மறுமையில் இன்னது கிடைக்கும் என்றும் நன்கு அறிந்தார்கள் . பிறகு அல்லாஹ்வை உள்ளப்படி அறிய வேண்டியது ஒன்று மட்டும் மீதி இருந்தது . அதனால் , அவர்கள் இதயத்தில் அல்லாஹ்வை அறியும் ஆசை குடிக்கொண்டது .
ஆண்டவரவர்களுக்கு ஆசைப் பிறந்தபோது " நிலத்தையும் , நீரையும் வைத்திருக்கும் ஒருவர் அந்நிலத்தில் விதைத்து  நீர்ப்பாய்ச்சி , பயிராக்கி பலன் அடையத்தக்க விதையில்லாமல் இருப்பாராயின் அவர் என்னப்பலனை அடையப்போகிறார்  ? ஒன்றுமில்லை . அப்படியே நாமும்  அல்லாஹ்வை அறிவதற்கு சாதனங்களாகிய ரூஹையும் , உடலையும் , அறிவையும் வைத்திருக்கிறோம் . இருந்தாலும் , இவற்றில் விதைத்துப் பலன் பெறக்கூடிய விதை நம்மிடம் இல்லை . அந்த விதையாவது , தக்க ஆசிரியரால் உபதேசிக்கப்படும் உபதேசம் . அந்த உபதேசத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் . அதற்காக ஒரு ஆசிரியரை தேடிப்போக வேண்டும் " என்று நினைத்தார்கள் . ஞானகுருவைத் தேடும் இந்த உத்தம எண்ணம் அவர்கள் இதயத்தில் வேரூண்டிற்று . தங்கள் பதினெட்டாம் வயதில் பிறந்த இந்த மேலான எண்ணத்தினால் ஆண்டவரவர்கள் தூண்டப்பட்டு , ஒரு நாள் தங்கள் தாய்தந்தையிடம் போய் பணிந்து நின்று , "என்னை அன்போடு பெற்றெடுத்த என் அருமையான பெற்றோர்களே !! இப்போது நான் சொல்லும் சொற்களை நீங்கள் கவனமாய் கேளுங்கள் . இவ்வுலகத்தில் ஒருவர்  எவ்வளவுப்பெரிய பாக்கியவனாக இருந்தாலும் எவ்வளவுப்பெரிய கல்விமானாக இருந்தாலும் தரையில் பரந்து கிடக்கும் மணல்களையும் , வானத்திலிருந்து பெய்யும் மழை துளிகளையும் அளவிட்டுசொல்ல வல்லவனாக இருந்தாலும் மறைந்த பொருள்களைஎல்லாம்  தெரியக்கூடியவனாக இருந்தாலும் அல்லாஹ்வை   அறியாதவராக இருந்தாரானால் , அவர் பிரயோஜனமில்லாதவர் ஆவார் . மனிதனாய் பிறந்த எவரும் கண்ணுக்கு இனிமையான காட்சிகளைக் காணவும் , காதுக்கு இனிமையான கீதங்களை கேட்கவும் , மூக்குக்கு இனிமையான நறுமணங்களை நுகரவும் ,  நாவிற்கு இனிமையான பண்டங்களை புசிக்கவும் , சரீரத்திற்கு இனிமையான பெண்களின் ஸ்பரிசத்திற்காக ஆசைக் கொண்டு தன் உணர்வுகளை அல்லாஹ்வை அறியும் ஞான சம்பந்த விசயங்களில் செலவிடாமல் , இவ்வுலக இச்சையில் செலவிட்டு நிற்பாரானால் , அவர்  எத்தனை நூல்களைக் கற்று தெளிந்தவராக இருந்தாலும் , மோட்சத்தை அடையமாட்டார் என்பது நன்றாக தெரிந்த விஷயம் . இவ்வுலக வாழ்வை மோகம் கொண்டு , அல்லாஹ்வை அறியும் விஷயத்தில் தலையிடாமல் , வாழ்நாளை வீணாக்கி மறைந்த பின்பு மிகவும் வருந்த நேரிடும் . இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் நாம் இங்கே வந்தது எதற்காக ? என்பதை அறிந்து , அல்லாஹ்வை வணங்கி , அவன் கூறிய காரியங்களை செய்வது கடமையாகும் .இது அல்லாமல் , இவ்வுலக வாழ்வை வீணாக்கி , மறைந்த பின்பு கைசேதமும் அனுபவிக்கும் துன்பமும் சொல்ல தேவைத்தானா ?? இவ்விஷயங்களில் நமக்கு தெளிவுபெற ஒரு ஞான சற்குரு அவசியம் வேண்டும் . குருவில்லாத எவரும் கண் இல்லாத குருடருக்கு சமம் ஆவார் . என் அருமை பெற்றோர்களே !! ஒருவர் இம்மையில் அல்லாஹ்வை அறியாதவராக இருந்தால் , அவர் மறுமையில் நஷ்டம் அடைந்தவராக இருப்பார் . அதனால் , சிருஷ்டியான என்னை சிருஷ்டிகனாகிய அல்லாஹ்வை எனக்கு தெளிவாய் உணர்த்தக்கூடிய ஒரு உத்தம ஞானகுருவை நான் தேடி அந்த சற்குருவின் உபதேசத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் " என்று சொன்னார்கள் . 
பெற்றோர்கள் இருவரும் மனமகிழ்ந்து மைந்தரை நோக்கி , " எங்கள் கண்மணியான அருமை மகனே !! உங்கள் காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு அவன்புறம் முகம்வைத்து இன்றைக்கே குருவைத் தேடி புறப்படுங்கள் . குருவைத் தேடி நீங்கள் வேறு எங்கும் போகவேண்டாம் . குவாலியர் என்னும் ஊரில் அவ்லியாக்களும் சிறந்த மஷாயிக்குகளும் அதிகம்பேர் இருக்கின்றார்கள் . அங்கே போனீர்களானால் அல்லாஹ் உங்களுக்கு ஞானகுருவை தரக்கூடும் . அவனுடைய பாதுகாப்பில் புறப்படுங்கள் " என்று ஆசிர்வதித்து , உத்தரவு கொடுத்தார்கள் . ஆண்டவர்களும் தங்கள் பயணத்திற்காக , வழித்துணை , வழிச்செலவுக்கான பொருள் ஒன்றும் கேட்கவில்லை . தன்னந்தனியே ஞானகுருவைத் தேடி புறப்பட்டார்கள் .
ஹிஜ்ரி 928ஆம் வருஷம் ஜமாதுல் ஆஹிர் மாதத்தில் ஒரு திங்கள்கிழமை அன்று மாணிக்கப்பூரைவிட்டு குவாலியருக்கு புறப்பட்டார்கள் .    

Monday, February 11, 2013

நாகூர் நாயகம் - ஹிலுரு (அலை) சந்திப்பு

அன்பிற்கினிய பாதுஷா நாயகத்தின் ஆஷிகீன்களே !! பக்தர்களே !!! தொடர்ந்து  பக்தியோடு ஆண்டவர்களின் சரித்திரத்தை என் வலைப்பூ தளத்திலே பார்வையிடும் ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் நன்றி கூறி ஆண்டவர்களின் சரித்திரத்தை தொடர்கிறேன் ..
நாகூர் ஆண்டவர்கள் நான்கு வயதில் கல்வி கற்றுவரும் காலத்தில் , ஒருநாள் ஒரு மரநிழலில் தனித்து நின்றார்கள் . அப்போது , நறுமணம் கமழும் பரிசுத்தமான வெள்ளை உடை அணிந்த முதியவர் ஆண்டவர் அவர்கள் அருகில் வந்து , " அல்லாஹ்வுக்கு பிரியமானவர்களே !! ஹசன் குத்தூசின் மைந்தரே !! அப்துல் காதிரே !! இங்கு தனித்து நிற்கிறீர்களா ?? உங்கள் வாயைத் திறந்துக் கொள்ளுங்கள் " என்று சொன்னார்கள் . ஆண்டவர்களும் வாயைத் திறந்தார்கள் . அப்போது அந்த பெரியவர் ஆண்டவர்களின் வாயில் மூன்று முறை துப்பிவிட்டு , " அப்துல் காதிரே !! அல்லாஹ் இன்று உங்களுக்கு இல்மையும் விலாயத்தையும் நிரப்பமாக்கினான் " என்று சொன்னார்கள் . ஆனந்தம் தரும் இந்த சொல்லைக் கேட்டு சந்தோஷமாய் அந்த முதியவரைப் பார்த்து ஆண்டவர் அவர்கள் தாங்கள் யார் ?? என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , " நான்தான் ஹிலுரு (அலை) " என்று சொல்லிவிட்டு மறைந்து  
போனார்கள் . 
பின்பு அடிக்கடி ஹிலுரு (அலை) அவர்கள் வந்து , ஆண்டவர் அவர்களை சந்தித்து , சலாம் சொல்லி , பேசிக் கொண்டிருப்பார்கள் . பல தடவைகளில் மதரஸாவிற்கு வந்து ஆண்டவர் அவர்களுக்கு ஓதிக் கொடுப்பார்கள் . இதுவல்லாமல் மலக்குகளும் ரிஜாலுள் கைபு என்னும் மறைவான மனிதர்களும் வந்து , ஹழ்ரத் ஆண்டவர் அவர்களை சந்தித்து , சலாம் சொல்லி  போவார்கள் . இது நடக்கும்போதெல்லாம் ஆண்டவர் அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிப்பார்கள். இதை அவர்கள் கேட்டு , ஆனந்தம் கொண்டு மைந்தர் மீது அதிக பக்தியுடன் இருப்பார்கள் .
ஆண்டவர் அவர்கள் ஐந்து வயதிலேயே திருக்குர்ஆனை ஓதி , மனப்பாடம் செய்துவிட்டார்கள் . எட்டுவயதிற்குள் அரபு இலக்கிய , இலக்கணம் முதலான லுகத்து , நதவு , சருபு முதலிய எல்லா நூல்களையும் சிறப்பாக கற்று தேறி , பிக்ஹு , அகாயிது , தசவ்வபு என்கிற மூன்றுவகை அறிவுகளையும் கற்றுத் தெளிந்தார்கள் . 14 வகை இல்முகளும் அவர்கள் மனமே இருப்பிடம் என்று குடிக்கொண்டன . இனி கற்கவேண்டியது ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு எல்லா கல்விகளையும் கற்று நிரப்பமானார்கள் .
ஹழ்ரத் ஆண்டவர் அவர்கள் வயது ஏற ஏற ஒழுக்க வழக்கங்களில் பெற்றோர் கண்டோர் கேட்டோர் மனம் குளிர்ந்து சந்தோசப்படும் அளவிற்கு நடந்துக் கொண்டார்கள் . 
தீனுல் இஸ்லாமுடைய சறவு என்கிற கட்டளைப்படி ஒரு சிறுபாவத்தையும் பெரும்பாவம் என்று நினைத்து இயன்றவரை அதை தவிர்த்து நடக்கவே முயல்வார்கள் . எந்நேரமும் அல்லாஹுதஆலாவை நினைத்து , அஞ்சி நடப்பார்கள் . 5 வேளை தொழுகையையும் நேரம் தவறாமல் தொழுவார்கள் . தினமும் குர்ஆன் ஓதுவார்கள் . வயது வர வர அதிக தேர்ச்சி பெற்றவர்களாய் விளங்கினார்கள் .

Sunday, February 10, 2013

கொட்டிய பால் மீண்டும் பாத்திரத்தில் வந்தது

நம் ஆண்டவர் அவர்கள் தாமாகவே பால்குடி மறந்து , நல்ல உணவுகள் உண்டு , சிற்றடி எடுத்துவைத்து திருநடை பயின்று , மழலைச் சொல் பேசிப்பழகி நாளொரு வண்ணமாய் வளர்ந்துவந்தார்கள் . இப்படி வளர்ந்து வயது மூன்று நிரப்பமாயிற்று .
ஒருநாள் , தாயார் பாத்திமா அவர்கள் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள் . நாகூர் ஆண்டவர்கள் அங்கு வந்து , " பால் காய்ச்சி முடிந்ததும் எனக்கு கொஞ்சம் குடிக்கத் தாருங்கள் " என்று சொன்னார்கள் . பால் தயாரானதும் தாயார் அவர்கள் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றினார்கள் . எதிர்பாராவிதமாக கைநழுவி பால் அனைத்தும் அடுப்பில் கொட்டி வீணானது . மகன் ஆசையாகக் கேட்டு இப்படி பால் அனைத்தும் கொட்டிவிட்டதே என்று அன்னை பாத்திமா மனம்வருந்தினார்கள் . அங்கு வந்த ஆண்டவர் அவர்கள் பால் கொட்டிக் கிடப்பதையும் தாய் மனம் வருந்துவதையும் கண்டு , " கவலைப்படாதீர்கள் . பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிஸ்மில்லாஹ் சொல்லி அள்ளி எடுங்கள் " என்றார்கள் . அவர்களும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிஸ்மில்லாஹ் சொல்லி அள்ளினார்கள் . என்ன ஆச்சர்யம் !!! கொட்டிய பால் அனைத்தும் தூசிகள் இன்றி அந்த பாத்திரத்தில் மீண்டும் நிறைந்தது . தாயார் மனமகிழ்ந்து மைந்தர் கையில் பாலைக் கொடுத்தார்கள் . அதை ஆண்டவர் அவர்கள் வாங்கி பருகி பசி தீர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் . 
அடிக்கடி இப்படி பல புதுமைகள் தாயார் மற்றும் எல்லோரும் இக்குழந்தையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை . சுற்றத்தார்களுக்கு உண்டான ஆனந்தத்திற்கும் அளவில்லை . அற்புதங்கள் அங்கு பரவிக்கொண்டு இருப்பதால் சுற்றுவட்டதாரும் அதிக ஆச்சர்யம் அடைந்தவர்களாக பயபக்தியோடு இருந்து வந்தார்கள் .  
நாகூர் ஆண்டவர் அவர்களின் அருமையான பக்தர்களே !!! நமது பாதுஷா நாயகம் அவர்களின் பேரரும் மகனார் சின்ன எஜமான் ஹழ்ரத் யூசுப் தாதா அவர்களின் அருமை மகனாருமாகிய ஹழ்ரத் பாவா பஹ்ருதீன் ஷஹீத் (ரலி) அவர்கள் அடக்கமாகியிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசலில் இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது . அன்னவர்களின் துஆ பரக்கத் நம் அனைவர் மீதும் நிலைக்கட்டுமாக !!! ஆமீன் ... அன்புடன் , ஹாஜி H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் 98941 25478 ..   

Saturday, February 9, 2013

நோன்பு பிறையை அறிவித்த ஆண்டவர்கள்

நமது நாகூர் ஆண்டவர்கள் சரித்திரத்தை பேராவலோடு தொடர்ந்து பார்த்து ஆதரவு அளித்து வரும் அருமை பக்தர்களுக்கு இந்த நாள் இனிய நாளாகட்டும் என்று கூறி தொடர்கிறேன் .
நமது நாகூர் ஆண்டவர்கள் பிறந்து 15 மாத குழந்தையாய் இருக்கும்போது நோன்பு மாதம் வந்தது . ரமலான் பிறை காணவேண்டிய அன்று மாலையில் ஆகாயத்தில் வந்து மூடி பிறை காணப்படவில்லை . அதனால் ஊரார் நோன்பு வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் . அன்றைய சஹர் நேரம் செய்யிதா பாத்திமா குழந்தையான ஆண்டவர்களை தூக்கி பாலூட்டப் போனபோது ஆண்டவர் அவர்கள் பால் குடிக்காமல் , முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் . அன்று பொழுதுவிடிந்தும் பால் குடிக்கவில்லை .
குழந்தை சென்ற வருஷத்து ரமலான் மாத 30 நாளும் நோன்பு நேரத்தில் பால் குடிக்காமல் இருந்ததால் இப்போதும் அப்படியே இருக்கிறது . ஆகையால் , இன்று இரவுதான் ரமலான்மாத முதல் பிறை என்று தீர்மானித்து தாமும் அன்றைக்கே நோன்பு பிடித்து ஊராருக்கும் தெரிவித்தார்கள் . செய்யிது ஹசன்  குத்தூசின் அற்புத பாலகர் பால்குடிக்காமல் இருப்பதால் இன்று ரமலான் மாத முதல் பிறை என்று மாணிக்கப்பூர்வாசிகள் அனைவரும் ஒருமித்து எல்லோரும் அன்றைக்கே நோன்பு வைத்துக்கொண்டார்கள் . அந்த வருடம் அவ்வூர் மக்களுக்கு 30 நோன்பும் கிடைத்தன .
இந்த அற்புத நாயகரான ஆண்டவர் அவர்கள் மார்க்க சட்டப்படி பால்குடி மறக்கும் காலம் வந்தபோது பெற்றோர்களின் எந்த முயற்சியும் இல்லாமல் தாங்களாவே வலிய பால்குடி மறந்தார்கள் . இதுவும் எல்லோர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது . 

உமிழ்நீரிலிருந்து பொற்காசு

அன்பிற்கினியவர்களே !! தொடர்ந்து பாதுஷா நாயகத்தின் வரலாற்றைப் படித்து வரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுஷா நாயகத்தின் பொருட்டால் நல்அருள் புரிவானாக !! நாகூர் ஆண்டவர் அவர்கள் பிறந்த நாளிலிருந்தே அவர்களால் மக்களுக்கு அவரவர் வேண்டின அநேக நல்ல காரியங்கள் நிறைவேறி வந்தன . வாதம் , பித்தம் , அம்மை பெருவியாதி போன்ற பலவித நோய்களும் , கூன் , குருடு , செவிடு , முடம் , மலடு போன்ற பிறவித் துன்பம் மற்றும் ஜின் , ஷைத்தான்களால் துன்பப்பட்டவர்களும் மனவேதனையால் நிம்மதி இழந்தவர்களும் வந்து ஆண்டவர் அவர்களை தரிசித்து அவரவர் துன்பம் நீங்கி இன்பத்துடன் போனார்கள் . (இன்றும் பாதுஷா நாயகத்தின் தர்காவிற்கு வந்து ஜியாரத் செய்து அவரவர் வேண்டின அநேக நல்ல காரியங்கள் நிறைவேறி துன்பம் நீங்கி இன்பத்துடன் போகிறார்கள் என்பதை இவ்வுலகமே அறியும் .நாமும் அறிவோம் .) 
ஆண்டவர் அவர்கள் ஐந்து மாத குழந்தையாய் இருந்தபோது தாயாரிடம் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள் . அப்போது வீட்டு வாசலில் ஒரு ஏழை வந்து அல்லாஹ்வுக்காக ஏதாவது கொடுங்கள் என்றுக் கேட்டார் . அந்த வேளையில்   அவருக்கு கொடுக்கக்கூடிய பொருள் ஒன்றும் வீட்டில் இல்லை . அன்னை பாத்திமா அவர் சொல்லைக் கேட்டு மனம்வருந்தி என்ன செய்வது ?? ஒன்றும் கொடுக்காமல் அவரைப் போகச் சொல்வதா ?? என்று கவலைப்பட்டு மடியில் இருக்கும் மைந்தர் முகத்தை உற்றுப்பார்த்தார்கள் . அப்போது ஆண்டவர் அவர்கள் வாயில் இருந்து உமிழ்நீர் வடிந்துக் கொண்டிருந்தது . அதில் அவ்வூரில் வழங்கும் பொற்காசு ஒன்று இருந்தது . அதைக் கண்ட அன்னை பாத்திமா அவர்கள் ஆச்சர்யப்பட்டு அதை எடுத்து வாசலில் நிற்கும் ஏழைக்கு கொடுத்து அவரை சந்தோசத்துடன் அனுப்பிவிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் .இப்படி வாசலில் வரும் முசாபிர்களுக்கு கொடுக்க சொல்லி பல தடவை ஆண்டவர் அவர்கள் வாயிலிருந்து  பொற்காசு வந்து க்கொண்டிருண்டதாக பல சரித்திர நூல்களில் சொல்கிறார்கள் . 

about me வாருங்கள் நாகூர் தர்காவிற்க்கு

எல்லா புகழும் இறைவனுக்கே!! சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி ........அஸ்ஸலாமு அலைக்கும் .(வரஹ் .....) எனது பெயர் ஹெச் .வாஞ்சூர் பக்கிர் சாஹிப் .நான் நன்னகராம் நாகூரில் அருளாட்சி செய்து வரும் எல்லா மதத்தினராலும் நாகூர் ஆண்டவர் என்றும் வட மாநிலத்தவர் மற்றும் உருது மொழி பேசுபவர்களால் காதிர்வலி என்றும் சுற்று வட்டார மக்கள் மற்றும் உள்ளூர்வாசிகளாலும் பெரிய எஜமான் என்று அன்போடு அழைக்கப்படும் ஹஜ்ரத்  செய்யிது ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் காதிர்வலி கஞ்சசவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் (பரம்பரை ஆதீனம்) என்பதில் பெருமகிழ்வு அடைகிறேன் . எனக்கு தமிழ் , ஆங்கிலம் , உருது , அரபி பேசத் தெரியும் . எனக்கு புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம் . நாகூர் தர்காவுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு ஆண்டவர்களின் வரலாறு , முக்கிய இடங்களைக் காண்பிப்பது , மனநிறைவாக பாத்திஹா ஓதி தப்ரூக் வழங்கி அவர்களை மகிழ்வோடு ஊருக்கு அனுப்பி வைப்பது எனது கடமை . முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை தமிழர்கள் மற்றும் அனைவருக்கும் அவர்கள் விரும்பக்கூடிய வகையில் தங்குமிடம் , உணவு மற்றும் அன்னதானம் தர்காவுக்கான நேர்த்திக்கடன் அனைத்தையும் உங்கள் விருப்பப்படி சிறப்பான முறையில் செய்து தருகிறேன் . நாகூர்  வரும் அன்பர்கள்என்னை  hvf.sahib@yahoo.com என்ற இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் .வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஏர்  போர்ட்டுக்கு அவர்கள் விரும்பும் வகையில் ஏ சி வாகன வசதி செய்து தரப்படும் .நான் இந்த வலைப்பூ தளம் உருவாக  காரணமே இங்கு தர்காஹ்விற்கு வருகை தருகிற நிறையப்பேர்களுக்கு ஆண்டவரவர்களின் சரித்திரம் தெரியவில்லை . இதனால் என்னால் இயன்றஅளவு எங்களின் பாட்டன் , முப்பாட்டன் சொன்னதைக் கேட்டும் நிறைய பத்திரிக்கைகள் , புத்தகங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இதை ஹஜ்ரத்  செய்யிது ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் காதிர்வலி கஞ்சசவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா நாயகம் அவர்களின் ஆஷிகீன்கள் , பக்தர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றேன் . எனக்கு சில வரலாற்று சிறப்புமிக்க நாகூர் தர்காவின் முக்கிய இடங்கள் , கல்வெட்டுகள் , பொருட்கள் ஆகியவற்றை துல்லியமாக போட்டோ எடுத்து இதில் அப்லோடு செய்ய விருப்பம் . இதற்காக எனக்கு ஒரு தரமான கேமரா தேவைப்படுகிறது . எனக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் என்னை தொடர்புக் கொள்ளவும் .நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ துவாச் செய்கிறேன் . நாகூர் ஆண்டவர்களின் சிங்கப்பூர் , மலேசிய பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களையும் , பிரார்த்தனைகளையும் நேரில் வந்தும் வராத பட்சத்திலும் அங்கிருந்தே செய்துக் கொள்ள என்னை தொடர்புக் கொள்ளவும் தொடர்புக்கு : +91 98941 25478 .. 
இந்த நாகூர் ஆண்டவர்களின் சரித்திரத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பிழையை சுட்டிக்காட்டும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் ..

Friday, February 8, 2013

நாகூர் ஆண்டவர்களின் பூவுலகத் தோற்றம்

ஹிஜ்ரி 910ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை தஹஜ்ஜத் நேரத்தில் சுல்தானுல் அவ்லியா குத்புல் அக்தாப் கௌதுல் இஸ்லாம் மீரான் சுல்தான் செய்யிது அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது கஞ்சசவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா சாஹிபு ஆண்டவர் அவர்கள் ஹழ்ரத்  ஹசன் குத்தூஸ்- அன்னை செய்யிதா பாத்திமா ஆகியோரின் அன்பு மகனாக இவ்வுலகில் பிறந்தார்கள் . அவர்கள் பிறந்தவுடன் மலக்குகளும் , அன்பியாக்களும் , அவ்லியாக்களும் ஆகாய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கி ஆண்டவர்களை தூக்கியெடுத்து முத்தமிட்டு துஆவும் செய்து தாயாராகிய பாத்திமாவுக்கு ஸலாமும் சுப சோபனமும் சொல்லி போய்க்கொண்டிருந்தார்கள் . அன்று பொழுது விடியும் வரை இது நடந்துக் கொண்டே இருந்தது . பின்பு பொழுது விடிந்து சூரியன் உதயமாயிற்று . சூரியன் உதித்த அதிகாலையில் நபி இல்யாஸ் (அலை) , நபி ஹிள்று (அலை) அவர்களும் பாத்திமாவின் மாளிகைக்கு வந்து ஹழ்ரத் ஆண்டவர்களை தூக்கி முத்தமிட்டு அவ்விருவர் வாயாலும் செய்யிது அப்துல் காதிரு என்று பெயரிட்டு அழைத்து துஆவும் செய்து தாயாராகிய பாத்திமாவுக்கு ஸலாமும் சுப சோபனமும் சொல்லிவிட்டுச் சென்றார்கள் .

அதன்பின் தந்தை ஹசன் குத்தூஸ் தங்கள் குடும்பத்தாருடன் சுற்றம்சூழ மகனுக்கு பெயரிட்டு சந்தோஷமாக இருந்தார்கள் .
ஆண்டவர்கள் பிறந்த அன்று ஊரில் உள்ள மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக மகத்துவமிக்க குழந்தையைப் பார்த்து துஆ செய்து தங்களுக்கு பரக்கத் தேடிக்கொண்டுப் போனார்கள் . இவ்வேளையில் அங்குவந்த ஒரு பெண் மகோதர நோய் வாய்ப்பட்டு இருந்தாள் . அவள் பேரருள்மிக்க குழந்தையை பார்த்துவிட்டு தன் கைகளை உயர்த்தி " யா அல்லாஹ் !! இந்த குழந்தை உன்னால் உவக்கப்பட்ட ஒலியாய் இருந்தால் இதன் பரக்கத்தைக் கொண்டு என் வியாதி தீரவேண்டும் " என்று அவள் கேட்டுமுடியவும் அவளுக்கு இருந்த துன்பங்கள் முழுவதும் நீங்கிவிட்டன . இதுவே நாகூர் ஆண்டவர்கள் பிறந்து நிகழ்ந்த முதல் அற்புதமாகும் ..

திருடர்களை விரட்டிய அற்புதம்


நாகூர் ஆண்டவர்கள் தன் தாயின் வயிற்றில் இருந்த ஒன்பதாமாதம் நிகழ்ந்த அற்புதம் இது .மாணிக்கபூரின் அருகில் இருந்த காட்டில் கொள்ளையர்கள் அதிகம் இருந்தார்கள் .இவர்கள் அடிக்கடி ஊரில் புகுந்து கொள்ளை அடிப்பது வழக்கம் .அன்றும் கொள்ளையர்கள் ஒன்று கூடி ஆயுத பாணிகளாய் வந்து மாணிக்கப்பூரை சுற்றி வளைத்தனர் .கொள்ளையரை எதிர்த்து நிற்க யாரும் வரவில்லை .ஊரே பயந்துப்போய் இருந்தது . ஆண்டவர்களின் தந்தை ஹசன் குத்தூஸ் இறைவணக்கத்தில் ஈடுபட்டு இருந்தார்கள் .தாயார் பாத்திமா ஊரில் நடக்கும் விசயங்களை கேட்டு தங்கள் வீட்டை தாளிட்டுகொண்டார்கள் .இரண்டு ரக் அத் நபில் தொழுது ,அத்தொழுகையின்  இருப்பிலேயே இருந்து "யா அல்லாஹ் !இக்கொள்ளையர்களிடமிருந்து எங்களை காப்பாற்று !இவர்களை துரத்தியடி என்று துவாக்கேட்டார்கள் .சிறிது நேரத்தில் தாயார் வயிற்றில் நிறை கர்ப்பமாய் இருக்கும் ஆண்டவரவர்கள் ஆச்சர்யமாகவும் ,அறியப்படாமலும் வயிற்றிலிருந்து வெளிப்பட்டு ,ஒரு வீரமிக்க வாலிபராய் ,பசுமையான உடை அணிந்து ,பிரகாசமிக்க வாள் ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு தாயார் முன் வந்து நின்று "அன்னையே ! இப்போது ஊரில் புகுந்திருக்கும் கொள்ளையர்களுக்காக தாங்கள் அஞ்சவேண்டாம் . இவ்வூரில் ஒரு சிறு துரும்பையும் எடுக்கவிடாமல் விரட்டியடிக்கிறேன் . அவர்கள்
மாணிக்கப்பூரை கனவிலும் நினைக்க மாட்டார்கள் . இன்றுமுதல் இவ்வூரில் அடியெடுத்து வைக்க துணிய மாட்டார்கள் " என்று சொல்லிவிட்டு வீட்டின் தலைவாசல் கதவை திறந்துக்கொண்டு வெளிப்பட்டார்கள் . வாசலில் சிவப்புக் குதிரை ஒன்று நின்றது . அதில் ஆண்டவர்கள் ஏறி கையில் பிடித்த வாளுடன் தயாராய் நின்றார்கள் . தங்கள் வயிற்றில் இருக்கும் பாலகரே வாலிபராய் வந்து சொன்ன சொற்களைக் கேட்டு செய்யிதா பாத்திமா ஆச்சர்யமாய் தலைவாசல் போய் இனி நடப்பதை அறிய ஆவலாய் பார்த்தார்கள் . பின்பு சற்று நேரத்தில் பச்சை நிற உடை அணிந்த சிவப்புக் குதிரைகளில் வந்த ஒரு கூட்டத்தார் , ஆயுதங்களை கையில் ஏந்தி வானத்தில் இருந்து இறங்கி ஒவ்வொருவராக ஆண்டவர்களிடத்தில் வந்து கையைத் தொட்டு முத்தமிட்டு ஸலாம் சொல்லி எல்லோரும் ஒருமித்து திரண்டு நின்றார்கள் . ஆண்டவர் அவர்கள் தாங்களே தளபதியாக திருடர்களை விரட்டி அடிக்கும்படி கட்டளையிட்டு சிங்கம்போல் பாய்ந்தார்கள் . ஆண்டவர்களின் குதிரைப்படையை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள் எதிர்ப்பு காட்டாமல் ஆண்டவர்களிடத்தில் வந்து திகைத்தவர்களாய் "எஜமானே ! தாங்கள் எங்கள் பிழையை மன்னித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் . இனி ஒருபோதும் நாங்கள் இந்த மாணிக்கப்பூரை கனவிலும் நினைக்க மாட்டோம் . இங்குவந்து கொள்ளையடிக்கும் எண்ணத்தை இப்போதே மறந்துவிட்டோம் . இது உண்மை என்று சத்தியம் செய்கிறோம் . உறுதியும் தருகிறோம் . மனதிரங்கி எங்களைக் காப்பாற்றுங்கள் " என்று பரிதாபத்துடன் கெஞ்சி மன்றாடினார்கள் . ஆண்டவர் அவர்கள் தங்கள் படையிடம் அவர்கள்மீது எக்காரணம் கொண்டும் ஆயுதப்பிரயோகம் செய்யாதபடி தடுத்துவிட்டு கொள்ளையர்களைப் போகும்படி சொன்னார்கள் . கொள்ளையர்கள் பிழைத்ததே பாக்கியம் என்று வந்தவழியே ஓடினார்கள் . பிறகு ஆண்டவர் அவர்கள் தங்கள் குதிரைப்படையை வந்தவாறே போக உத்தரவிட்டு தங்கள் வீட்டுவாசலில் வந்து குதிரையை விட்டு இறங்கி உள்ளே புகுந்தார்கள் . இதற்குள் நடுஜாமம் ஆயிற்று . இவ்வளவையும் தாயாராகிய அன்னை பாத்திமா வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள் . வீட்டுக்குள் புகுந்த ஆண்டவர் அவர்கள் தாயார்முன் மறுபடியும் போய்நின்று ஸலாம் சொல்லி "அம்மா ! நான் தங்கள் வயிற்றிலிருந்து பிறக்கும் நாள் நெருங்கிவிட்டது " என்று சொல்லிவிட்டு வயிற்றுக்குள் மறைந்தார்கள் . இந்த அற்புத காட்சிகள் அனைத்தையும் கண்கூடாய் கண்ட அன்னை பாத்திமா ஆனந்தமும் ஆச்சர்யமுமடைந்து , பொழுது விடியும்வரையும் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள் .

Thursday, February 7, 2013

அற்புத அவதாரம் நாகூர் நாயகம்

தொடர்ந்து ஆவலோடு ஆண்டவர் அவர்களின் வரலாற்றைப் படிக்கும் அன்பிற்கினியவர்களே !! ஆண்டவர் அவர்கள்  தாயின் கருவில் இருக்கும்போது தந்தை அவர்கள் கடுமையான நோய்வுற்றார்கள்.அந்த நோயிலிருந்து தப்பிப் பிழைப்பார்களா ?? என்று மனங்கலங்கி அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள் . இப்படி இருக்கும்போது ஒருநாள் அவர்களின் வயிற்றிலிருந்து ஆச்சர்யமான ஒரு சத்தம் வந்தது . "அன்னையே!! தாங்கள் அஞ்சாதீர்கள் . என் தந்தை இந்த வியாதியால் இறந்துவிட மாட்டார்கள் . இன்றைய தினமே பரிபூரண குணமடைவார்கள் . அந்த சத்தத்தின்படி அன்றைய தினமே சுகம் அடைந்தார்கள் . தந்தை தாய் இருவரும் சிசுவின் வாய்மொழிக்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் . இதுபோல ஒருமுறை மாணிக்கப்பூரில் கடும் பஞ்சம் பிடித்தது . பாக்கியவான்கள் கூட பட்டினி கிடக்க நேர்ந்தது . நெடுநாள் மழையின்றி ஏரி,குளம்,கிணறு அனைத்தும் வற்றி வறண்டன . குடிக்க தண்ணீரின்றி விலங்குகளும் மனிதர்களும் மாண்டார்கள் . ஆண்டவர் அவர்களின் பெற்றோர்கள் இருவரும் ஆகாரமின்றி மூன்று நாள் வரையும் பட்டினியாய் இருந்தார்கள் . ஆயினும் இபாதத்தில் பலத்தோடு கொஞ்சமும் சளைக்காமல் இருந்தார்கள் . பஞ்சம் தொலைந்து தங்கள் ஊர்மக்கள் பசியால் வருந்தாதபடி சுகம்பெறும் பொருட்டு தினமும் அல்லாஹ்விடம் மன்றாடிக் கொண்டு இருந்தார்கள் . ஒருநாள் அன்னை பாத்திமாவின் வயிற்றிலிருந்து ஒரு சத்தம் வந்தது . " என் அருமையான பெற்றோர்களே !! இந்த பஞ்சத்தைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் . நம் வீட்டுக் களஞ்சியத்தைப் பாருங்கள் . அதில் தானியங்கள் இருக்கும் . கொஞ்சமாக இருந்தாலும் அதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போட்டு உணவாக்கி பிறருக்கும் கொடுத்து நீங்களும் உண்ணுங்கள் . அது ஒருநாள் முழுதும் எல்லோர்க்கும் போதுமானதாக இருக்கும் . பஞ்சம் தீரும்வரை நாள்தோறும் களஞ்சியத்தில் தானியம் இருக்கும் . அதை அன்றாடம் எடுத்து அனைவருக்கும் கொடுங்கள் ". தங்கள் அருமை பாலகர் வயிற்றிலிருந்துக்கொண்டு சொன்ன உத்தம வசனத்தைக் கேட்டு உடனே எழுந்துபோய் களஞ்சியத்தைப் பார்த்தார்கள் . ஒரு பிடி அளவே தானியம் இருந்தது . அதை எடுத்துவந்து பெரிய செப்புப் பாத்திரத்தில் போட்டு சோறு ஆக்கினார்கள் . அது அதிகம் பேர் பசியைப் போக்கியது . பாத்திரம் நிரம்பி இருந்தது . அன்னை பாத்திமா அவர்கள் தங்கள் சுற்றத்தார் , அன்னியர் , எளியோர் எல்லோருக்கும் கொடுத்து தாங்களும் கணவரும் உண்டார்கள் . இதுபோல பஞ்சம் தீரும்வரை கொடுத்து வந்தார்கள் . சில தினங்களில் பஞ்சம் தீர்ந்து ஊர் செழிப்படைந்தது .

நாகூர் ஆண்டவர்களின் முதல் அற்புதம்

நாகூர் ஆண்டவர்கள் தன் தாய்வயிற்றில் கருவில் இருந்தபோது ஒருநாள் ஆண்டவர்களின் தாயார் செய்யிதா பாத்திமா (ரஹ்) சுபுஹு நேரத் தொழுகைக்காக ஒளு செய்ய கிணற்றில் தண்ணீர் எடுத்தார்கள் . அப்போது கயிறு அறுந்து தண்ணீருடன் வாளியும் கிணற்றில் விழுந்தது . நேரமோ சென்றுக்கொண்டு இருந்தது . எவ்வளவு முயற்சி செய்தும் வாளியை எடுக்க முடியவில்லை . ஆண்டவர்களின் தாயார் செய்யிதா பாத்திமா(ரஹ்) அவர்கள்,   " யா அல்லாஹ் ! சுபுஹு நேரம் முடிவதற்குள் நான் தொழுதாக வேண்டுமே " என்று துஆக் கேட்டு முடியவும் அவர்கள் வயிற்றிலிருந்து "தண்ணீர் நிறைந்த வாளி தங்கள் பக்கத்தில் இருக்கிறது " என்று குரல் கேட்டது . கிணற்றில் விழுந்த வாளி தண்ணீருடன் இருப்பதைக் கண்டு பெருமகிழ்வு அடைந்தார்கள். இதுவே நம் ஆண்டவர் அவர்களின் முதல் அற்புதம் .. 
தொடரும் நண்பர்களே .................................................................................................................

Wednesday, February 6, 2013

நாகூர் ஆண்டவர்களின் தோற்றம்

*இது மாணிக்கப்பூரில் இருக்கும் நாகூர் ஆண்டவர்களின் பெற்றோர்களான ஹஜ்ரத் ஹசன் குத்தூஸ் -பீபி பாத்திமா ஆகியோரின் அடக்கஸ்தலமாகும்*  இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி அருகில் மாணிக்கப்பூர் உள்ளது . இங்கு செய்யது ஹசன் குத்தூஸ்(ரஹ் )செய்யதத் பாத்திமா (ரஹ் )தம்பதிகளுக்கு அன்பு மகனாய் பிறந்தார்கள் .இவர்கள் தை வயிற்ர்ல் இருக்கும்போது  அல்லாஹ் ஹிலிறு (அலை)மூலம் ஒரு செய்தியை கனவில் அறிவித்தான் .  உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு மகிமை பொருந்திய இறைவனின் அருள்  பெற்றதாகும் .இந்த குழந்தை பிறந்தவுடன் இதற்கு அப்துல் காதிறு என்று பெயர் வையுங்கள் என்று  சொல்லி மறைந்தார்கள் .அதேப்போல் குழந்தை பிறந்தவுடன் அப்துல் காதிறு என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள் .தொடரும்.....

Sunday, February 3, 2013

நானிலம் போற்றும் நாகூர்


வாருங்கள் நண்பர்களே ! உங்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன் .நாகூர் இன்றுவரை பலரின் பிரச்னைகளுக்கு தீர்வுத் தரக்கூடிய இடமாகவும் ,பலருடைய நோய்களுக்கு சுகம்தரக்கூடிய தாகவும் ,மனக்கஷ் டதிற்கு நிம்மதி தரக்கூடிய இடமாகவும் இருக்கிறது .இதற்கு காரணமாக விளங்கும் அனைவராலும் நாகூர் ஆண்டவர் என்று அன்போடு அழைக்கப்படும்  மகான் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அடக்கமாகி இருக்கும் நாகூர் தர்காவும் ,ஐந்து மினாராக்களும் கம்பீரமாக நிற்கின்றன . நாகூர் தர்கா இல்லைஎன்றால் நாகூர் இல்லை என்பதை இங்கு வரும் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் . ஆம் !அதுதான் உண்மை !!பிரியமானவர்களே ,நாகூர் பற்றியும் ,நாகூர் ஆண்டவர்களின் வரலாறு ,அற்ப்புதங்களையும் தங்களுக்கு என்னால் இயன்றவரை தர இருக்கிறேன் .தொடர்ந்து தளத்திற்கு  வருகை தாருங்கள் .நன்றி !!!